Monday, December 03, 2007

Star3. நரேந்திர மோடி, தெஹல்கா, குஜராத் தேர்தல் ...

சமீபத்தில் தெஹல்கா, கோத்ரா ரயில் எரிப்பு விவகாரத்தைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை பற்றி பிஜேபி மற்றும் விஹெச்பி பிரமுகர்கள் சிலர் பேசிய பேச்சை (அவர்களுக்குத் தெரியாமல் கேமராவில் படம் பிடித்து) அம்பலப்படுத்தியுள்ளது. வன்முறையின் போது, அரசு நடவடிக்கைகளின் மெத்தனம் குறித்தும், பின் குற்றவாளிகளை காப்பாற்ற அரசே முனைந்தது பற்றியும் சந்தேகங்கள் நிலவி வந்தாலும், இப்போது தெஹல்கா வாயிலாக மாநில அரசு வன்முறைக்கு துணை போனது உண்மை தான் என்பது நிரூபணமாகி விட்டது!

மோடி குறித்த 'புரிதல்' இல்லாதவருக்கு வேண்டுமானால், தெஹல்கா செய்த அம்பலம் ஆச்சரியத்தைத் தரலாம். ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடியது போல, பெண்களையும், முதியவர்களையும் வெட்டிச் சாய்த்தது குறித்து அந்த 'வீடியோ' கனவான்கள் பெருமையாக பேசியிருப்பதைக் கேட்டபோது, மனது கனத்துப் போனது. என்ன மாதிரி ஜந்துக்கள் இவர்கள் :(

முதல்வர் மோடி, வீடியோவில் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று (குறைந்த பட்சம்) மறுப்பு தெரிவிக்காமல், தெஹல்கா டேப்பை ஒளிபரப்பிய சேனல்களை இருட்டடிப்பு செய்ததின் மூலம், கோரமான உண்மையை மூடி மறைக்க முடியுமா? அவரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. அது போலவே, குஜராத் தேர்தலுக்கு முன் தெஹல்கா இதை வெளியிட்டதற்கு காங்கிரஸை குற்றம் சாட்டி அரசியல் நோக்கம் கற்பிப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

பொதுவாக, அரசியல்வியாதிகள், நம்பிக்கைக்குரிய ஆட்களிடமே, தாங்கள் செய்த குற்றங்கள் பற்றிப் பேச / ஒப்புக்கொள்ளத் தயங்குவார்கள். ஆனால், இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வன்முறையை பெருமைக்குரியது போல பீற்றிக் கொண்டதுக்கு காரணமாக நான் நினைப்பது, குஜராத்தில் இஸ்லாமிய வெறுப்பு என்பது அரசியல் ஆதாயம் (அதாவது தேர்தலில் ஓட்டுகளாக) பெற்றுத் தரும் விஷயமாக கருதப்படுவது தான்! மோடி கூட, அதே காரணத்தால் தான், தெஹெல்கா வீடியோ பேச்சுகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு பேச்சுக்குக் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை!

நம் சமூக வரலாற்றில், இது போன்ற வன்முறை நிகழ்வுகள் விரவிக் கிடக்கின்றன! 1989-இல் நடந்த பகல்பூர் வன்முறை குறித்த வழக்கு தற்போது தான் முடிவடைந்து, பேருக்குச் சிலரே தண்டனை பெற்றுள்ளனர். 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் நேரடியாக ஈடுபட்ட பலர், இன்று உயர் அரசியல் பதவிகளில் உள்ளனர்! 1993 மும்பை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடந்தேறிய வன்முறை தொடர்பான வழக்கு முடிவடைய 14 ஆண்டுகள் ஆனதற்குக் காரணம் மகாராட்டிரத்தில் ஆட்சி செய்த மாநில அரசுகள் (காங்கிரஸையும் சேர்த்து) தான் என்றால் அது மிகையில்லை!

தெஹல்கா வீடியோ ஆதாரத்தை வைத்து யாராவது வழக்கு தொடர்ந்து அதன் முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை! அதற்கு எவ்வளவு காலம் ஆகுமோ? வழக்கை நீர்த்துப் போக வைக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்படுமோ? ஏன் காங்கிரஸே கூட வழக்கு தொடரலாமே? ஆனால், செய்ய மாட்டார்கள்! சமீபத்தில் பிஜேபியிலிருந்து காங்கிரசுக்குத் தாவியவர்கள் பலர் மீது குஜராத் வன்முறைக்கு துணை போனதாக குற்றச்சாட்டு இருக்கிறது!

2002 வன்முறைக்குப் பின், மோடி தன்னை ஒரு புது மனிதராகக் காட்டிக் கொள்ள ஓரளவு முயற்சி எடுத்திருக்கிறார் என்பதும் உண்மையே. சிறப்பான நிர்வாகத்தின் மூலம், திட்டங்கள் மூலம், மோடி மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்றிருப்பினும், அவரது கடந்த காலம் அவரை விடாமல் துரத்துகிறது! யாரும் அந்த கொடிய வன்முறையை மறக்கவும், மோடியை மன்னிக்கவும் தயாராக இல்லை! 'Gujarat shining' கோஷத்தோடு, பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் குறித்த நடுத்தர இந்துக்களின் அச்சங்களையும் வரும் தேர்தலில் மோடி தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்.

மேலும், மோடியின் சந்தேகமற்ற இந்து சார்பு நிலையே, பல NRI குஜராத்திகள் அம்மாநிலத்தில் பெருமளவு முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம் என்று என் குஜராத்தி நண்பன் திட்டவட்டமாக கூறுவது சிலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.

அது போலவே, குஜராத் தேர்தலில் மோடி வென்று மீண்டும் ஆட்சிக்கு (தெஹல்காவையும் மீறி!) வரக் கூடிய சாத்தியம் இருப்பதாகவே தெரிகிறது! ஏன், மோடி மீண்டும் ஆட்சிக்கு வர தெஹல்கா விவகாரம் உதவியாகக் கூட இருக்கலாம்! ஏனெனில், ஏற்கனவே இந்து-முஸ்லிம் என்று பிளவுபட்டுக் கிடக்கும் மாநிலத்தில், இது போன்ற விஷயங்கள் மூலம் polarization அதிகரிப்பது மோடிக்கு சாதகமாகவே அமையலாம்.

இம்முறை காங்கிரசும், தங்கள் வாக்குகள் சிதறிப் போய் விடக் கூடாது என்ற எண்ணத்தில் தான், (சென்ற முறை போல் ஆகி விடாமல் இருக்க) NCP-யுடன் கூட்டணி வைத்துள்ளது. அது போலவே, பிஜேபியிலிருந்து விலகி வந்தவர்களுக்கும் நேசக் கரம் நீட்டியுள்ளது. படேல் சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை அரவணைத்து, காங்கிரஸ் பலருக்கு சீட்டு கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாவின் சத்யாகிரக இயக்கத்தின் நூறாவது ஆண்டு நிறைவுத் தீர்மானத்தை, சமீபத்திய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியது கூட குஜராத் தேர்தலை முன்னிட்டுத் தான். குஜராத் வன்முறையால் உண்டான பிரிவினைச் சூழல் மாறுவதற்கு காந்தி போதித்த இந்து-முஸ்லிம் சகோதரத்துவம் உதவுமா என்பதற்கான விடை தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்!

அகிம்சாவாதி மகாத்மா பிறந்த புண்ணிய பூமி இம்மாதிரி அவலச் சூழலில் சிக்கிக் கிடப்பது தான் பெரிய கொடுமை, வேறென்னத்தச் சொல்ல!

11 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

வஜ்ரா said...

ஹிண்துத்வா என்கிற போலி மதச்சார்பின்மை

தெஹல்கா

குஜராத் 2002, ஆதாரங்கள் ஆராய்ச்சி

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா,

வருகைக்கு நன்றி. பார்த்து ரொம்ப நாளாச்சு :)

சுட்டி கொடுத்துட்டுப் போனா எப்படி ?

உங்கள் கருத்தை சொல்லுங்களேன்!

எ.அ.பாலா

சிவபாலன் said...

பாலா

நடசத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

நல்ல அலசல். நல்ல அரசியல் பார்வை!

பதிவுக்கு நன்றி!

enRenRum-anbudan.BALA said...

சிவபாலன்,
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

சீனு said...

//முதல்வர் மோடி, வீடியோவில் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று (குறைந்த பட்சம்) மறுப்பு தெரிவிக்காமல், தெஹல்கா டேப்பை ஒளிபரப்பிய சேனல்களை இருட்டடிப்பு செய்ததின் மூலம், கோரமான உண்மையை மூடி மறைக்க முடியுமா? //

அப்போ தானே அவருக்கு ஓட்டு கிடைக்கும்...

இந்த வார ஆ.வி.யில், ஒரு வேளை குஜராத்தில் மோடி வென்றால் பா.ஜ.க.வின் பிரதம வேட்பாளராக அவர் நிறுத்தப்படும் வாய்ப்பு அதிகமாம்...என்ன சொல்ல?

வஜ்ரா said...

//
சுட்டி கொடுத்துட்டுப் போனா எப்படி ?

உங்கள் கருத்தை சொல்லுங்களேன்!

எ.அ.பாலா
//

நான் குஜராத்தில் வாக்கு செலுத்துவதாக இருந்தால் என் வாக்கு நரேந்திர மோடிக்கே.

Unknown said...

மொடி பிரதம் தலைவரானால் அப்ப இந்தியா நெலைமை

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா,
மீள்வருகைக்கு நன்றி.

ஜெயம்,
வாங்க !
//மொடி பிரதம் தலைவரானால் அப்ப இந்தியா நெலைமை
//

ஓஹோ தான் ;)

enRenRum-anbudan.BALA said...

சீனு,
//இந்த வார ஆ.வி.யில், ஒரு வேளை குஜராத்தில் மோடி வென்றால் பா.ஜ.க.வின் பிரதம வேட்பாளராக அவர் நிறுத்தப்படும் வாய்ப்பு அதிகமாம்...என்ன சொல்ல?
//
அந்த வாய்ப்பு இல்ல போல இருக்கு ! அதான், அத்வானியை பிரதம மந்திரி வேட்பாளராக அறிவிச்சுட்டாங்களே !

suvanappiriyan said...

Mr Bala!

நடசத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

நல்ல அலசல். நல்ல அரசியல் பார்வை!

பதிவுக்கு நன்றி!

-Suvanappiriyan.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails